மத்தியப் பிரதேசத்தில் சைபர் மோசடியில் சிக்கி தற்கொலை செய்த 65 வயதுமுதியவர் – குடும்பத்தில் சோகமே முடிந்தது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பழங்கால நாணயங்களை அரசு உயர்ந்த விலைக்கு வாங்கும் என நம்பவைத்த ஒரு சைபர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட 65 வயதான ஓய்வுபெற்ற ஒருவர், மனவேதனையில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ரேவா நகரத்தைச் சேர்ந்தவர் சரோஜ் துபே. இவர் பள்ளியொன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த ஜூலை 1-ஆம் தேதி, அவருக்கு பெயர் தெரியாத ஒரு எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்த நபர், “நாங்கள் பழங்கால நாணய நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பழமை வாய்ந்த நாணயங்களை அரசு கலாசார மற்றும் வரலாற்றுப் பயன்பாடுகளுக்காக வாங்குகிறது. ஒவ்வொரு நாணைக்கும் லட்சக்கணக்கில் பணம் தரப்படும்,” என கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளில் நம்பிக்கை வைத்த துபே, தன்னிடம் இருந்த பழங்கால நாணயங்களின் படங்களை அந்த நபருக்கு அனுப்பினார். அதன் பிறகு, “நாணயங்களுக்கு ரூ.66.75 லட்சம் வழங்கப்படும்; ஆனால் இந்த தொகையை செயலாக்க ரூ.520 கட்டணமாக கட்ட வேண்டும்,” எனக் கூறி பணம் கோரியுள்ளனர்.
துபே நம்பிக்கையுடன் அந்த பணத்தை செலுத்தியதும், மோசடிக்கும்பல் அவருக்கு பரிசுப் பணம் நிரம்பிய பைகள் மற்றும் போலியான சான்றிதழ்கள் ஆகியவற்றை வீடியோவாகவும், படங்களாகவும் அவருடைய வாட்ஸ்அப்புக்கு அனுப்பினர். இதனால் மகிழ்ச்சியடைந்த துபே, கும்பல் கேட்டபடி ஜிஎஸ்டி மற்றும் வரி கட்டணங்களுக்காக மேலும் பணம் செலுத்தத் தயார் ஆனார். இதில், பலரும் வங்கிக் கடனாகவும், நண்பர்களிடமும் ரூ.37,000 வரை சேர்த்து ஆறு முறை பணம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மேலும் ரூ.10,000 பணம் செலுத்துமாறு அவர்கள் கோரியபோது அவரது மனைவி நிர்மலா இதில் சந்தேகப்பட்டு விசாரிக்கத் தொடங்கினார். அவர் உண்மையை தெரிந்து கொண்டதும், குடும்பத்தினரால் துபேக்கு இது ஏமாற்றாக இருப்பது உணர்த்தப்பட்டது. இதனால் மனமுடைந்த துபே, தன்னுடைய தந்தையிடம் இருந்து உரிமையாக பெற்றிருந்த துப்பாக்கியை எடுத்து, அதில் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ரேவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சிங் கூறியதாவது:
“இந்த சம்பவம் தொடர்பாக சைபர் மோசடி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் என இரு பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்கால நாணயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தரப்படும் எனக் கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வகை மோசடி முறைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். துபே பணம் செலுத்திய வங்கி கணக்குகள் மற்றும் அந்த கும்பல் பயன்படுத்திய ஐ.பி முகவரிகள் மூலமாக தீவிர விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.