சைப்ரஸ் மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கப்பல் துறையைச் சார்ந்த முன்னணி நிறுவனங்கள், இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி அளவிலான முதலீடு செய்ய தீர்மானித்துள்ளன.
இந்த முதலீட்டில், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இன்டர் ஓரியண்ட் நேவிகேஷன் கம்பெனி மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டென்ஷிப் & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இவை, இந்தியாவின் கப்பல் தொழில்துறையை வலுப்படுத்தும் நோக்கில், நேரடி அன்னிய முதலீட்டுத் திட்டம் (FDI) வாயிலாக இம்முக்கிய முதலீட்டை மேற்கொள்ளவுள்ளன.
2005 ஆம் ஆண்டு பின்னர், இந்திய கப்பல் துறையில் நிகழும் இது, மிகப்பெரிய அளவிலான நேரடி அன்னிய முதலீடாகும். இந்த நிறுவங்கள், இந்தியாவின் கடல்சார் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வகையில், இந்த ரூ.10,000 கோடி முதலீட்டை பயன்படுத்தவிருக்கின்றன.
இந்த முதலீட்டின் பயனாக, இந்தியாவின் கடல்சார் வளங்கள் மேலும் விரிவடையும்; மேலும், இத்துறையின் வளர்ச்சியுடன் கூடிய வேலை வாய்ப்புகளும் பெரிதளவில் உருவாகும். இதில், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியக் கொடி கீழ் புதிய நடவடிக்கைகள்
இந்த முதலீட்டின் ஒரு முக்கிய அங்கமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து புதிய கப்பல்களும், இந்தியக் கொடியின் கீழ் பதிவு செய்யப்படும். இதன் மூலம், இந்தியக் கப்பல் துறை வலுவடைந்து, அதன் சர்வதேச தாக்கமும் அதிகரிக்கும்.
முன்னணி நிறுவனங்கள் பற்றிய விவரம்:
1979-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இன்டர் ஓரியண்ட் நேவிகேஷன், தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்களை நிர்வகித்து வரும் ஒருங்கிணைந்த குழுவாக விளங்குகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையில், இது ஒரு நம்பகமான மற்றும் புகழ்பெற்ற நிறுவனமாக அறியப்படுகிறது.
அதேபோல், டென்மார்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட டென்ஷிப் & பார்ட்னர்ஸ், உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கப்பல் சார்ந்த தரகு சேவைகள், வணிக மேலாண்மை மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு கடல்சார் தொழில்சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்றது.