முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் 50 லட்சம் உறுப்பினர்களைத் தாண்டி வெற்றிக்குத் தொடர்ந்து நகர்கிறது!
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக சார்பில் நடக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கை இயக்கம், மாநிலம் முழுவதும் மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்கத்தை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வாக்குச்சாவடி அடிப்படையிலான பகுதிகளில் 45 நாட்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று, குறைந்தபட்சம் 30 சதவீத குடிமக்களை கட்சியில் இணைக்கும் வகையில் திட்டமிட்டு, அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தேவையான பணிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், ஜூலை 3ஆம் தேதியிலிருந்து இச்சேர்க்கை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னேறியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களை திமுக உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:
“ஐம்பது லட்சம் புதிய உறுப்பினர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம். இது ஒரு மகத்தான வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறது. இன்று (நேற்று) காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த சந்நிதி தெருவில் நானும் நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் பங்கேற்றேன். இது எனக்கு பெரும் நெகிழ்வையும், மகிழ்ச்சியையும் அளித்தது.
தமிழகமெங்கும் எழுச்சியுடன் முன்னேறும் இந்த இயக்கத்தில், திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அந்தத் தொகுதியில் மட்டும் 54,310 புதிய உறுப்பினர்கள், 30,975 குடும்பங்கள் திமுகவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பான சாதனையை முடித்துவைத்த மாவட்டச் செயலாளரும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான நிர்வாக அணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
திருச்சுழியை மிஞ்சிக் காண்பிக்கும் முயற்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் வாழ்த்துகள். அனைவரும் ஒருமித்த முயற்சியுடன் செயல்பட்டால், நம்முடைய இலக்கு நிச்சயமாக நிறைவேறும். வெற்றியின் விழாவில் நாம் சந்திப்போம்!”