டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 400 ரன்களின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாம் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் பெரும் வீரர் பிரையன் லாரா கூறியதாக, தென் ஆப்பிரிக்க வீரர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், வியான் முல்டர் அபாரமாக ஆடி 367 ரன்கள் குவித்திருந்தார். ஆனால், இரண்டாவது நாள் மதிய உணவுக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்க அணி தங்களது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால், லாராவின் 400 ரன்களின் உலக சாதனையை எட்டும் வாய்ப்பு முல்டரிடம் இருந்தபோதும், அவர் அதை தவிர்த்து விட்டார்.
மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த பிரயன் லாரா, 2004ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எவரும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்திருந்தார். முல்டருக்கு அந்த சாதனையை மீற 34 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டாலும், அவர் சாதனையை நோக்கிச் செல்லாமல், அணியின் நலனைக் கருத்தில் கொண்டு டிக்ளேர் செய்ய முடிவு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இது மிகப் பெரிய விவாதமாகவே மாறியது.
இதுபற்றி பேசும்போது முல்டர் கூறியதாவது, “இந்த முடிவை நான் எனது விருப்பத்தினாலேயே எடுத்தேன். பிராயன் லாராவை மதித்து, அவரது பெருமையைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன்” எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர், லாரா மற்றும் முல்டர் இருவரும் இணைந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலில் என்ன நடந்தது என்பதைப் பகிர்ந்த முல்டர் கூறியதாவது:
“லாரா என்னிடம் பேசினார். என் பாரம்பரியத்தை உருவாக்க வேண்டுமானால், அப்போது 400 ரன்கள் அடிக்க முயற்சி செய்ய வேண்டியது நல்லதாயிருக்கும் என அவர் கூறினார். சாதனைகள் என்பவை மீறப்படுவதற்காகத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
அடுத்த முறை நான் அதேபோன்ற சூழ்நிலையில் இருந்தால், கண்டிப்பாக அந்த சாதனையை நோக்கிச் செல்லும் முயற்சியை மேற்கொள் என அவர் அறிவுரை வழங்கினார். அவரது பார்வையில் அது அருமையான அணுகுமுறையாக இருந்தது. ஆனால், நான் எடுத்த முடிவில் தவறு இல்லை என நான் நம்புகிறேன்.
நான் விளையாடும் இந்த விளையாட்டை நான் நேசிக்கிறேன். அதற்கு மரியாதை கொடுப்பதே என் முதன்மை கடமை” என்று முல்டர் தெரிவித்துள்ளார்.