மதுரை மாநகராட்சி வரிவசூல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உதவி ஆணையர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றிய தினேஷ்குமார், தனது பதவிக்காலத்தில் வரி வசூல் நடவடிக்கைகள் தொடர்பாக திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வரி வசூல் நடவடிக்கைகளில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதன் விளைவாக மாநகராட்சிக்கு பணம் வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப் பிரிவும் சைபர் குற்றப்பிரிவும் இணைந்து விசாரணை செய்து வருகின்றன. விசாரணையின் அடிப்படையில், மாநகராட்சி உதவி வருவாய் அலுவலராக பணியாற்றிய செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன் மற்றும் இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர் ஆகியோர் கைதாகினர். மொத்தம் 8 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர், ஒப்பந்த ஊழியர் சதீஷ் மற்றும் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் ஆகியோர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த ஜாமீன் மனு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில், மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி, வழக்கு தொடர்பான ஆவணங்களை முழுமையாக பரிசீலிக்க கூடுதல் நேரம் தேவைப்படும் எனக் கோரினார். இதனை கருத்தில் கொண்டு நீதிபதி, ஜாமீன் மனு விசாரணையை வரும் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.