திபெத்தில் சீன அரசு நடத்தும் தங்கும் வசதியுள்ள பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
1911-ஆம் ஆண்டு சீனாவில் இடம்பெற்ற ஜின்ஹை புரட்சிக்கு பிறகு திபெத் ஒரு சுயாட்சியுள்ள நாட்டாக பிரிந்து செயல்பட்டது. ஆனால், 1950-ஆம் ஆண்டில் சீனா திபெத்தை மீண்டும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்தது. இதனையடுத்து, 14-வது தலாய் லாமா திபெத்திலிருந்து வெளியேறி, தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.
அதே சமயம், அடுத்த தலாய் லாமாவை தாங்களே தேர்ந்தெடுப்போம் என்று சீன அரசு அறிவித்தது. இதற்கு பதிலளித்த தலாய் லாமா, தலாய் லாமாவின் அடுத்தவரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் ‘காடன் போட்ராங்’ என்ற திபெத்திய அறக்கட்டளைக்கு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், ‘திபெத் ஆக்ஷன் இன்ஸ்டிட்யூட் (TAI)’ என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, திபெத்தில் இயங்கும் சீன அரசின் தங்கும் வசதியுள்ள கல்வி நிலையங்களில் 10 லட்சம் குழந்தைகள் தங்கள் விருப்பத்திற்கு முரணாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 முதல் 6 வயதுடைய சுமார் 1 லட்சம் சிறுவர், சிறுமிகள் அடங்குகிறார்கள். பெரும்பாலான இக்குழந்தைகள் ஊரக பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்து அவர்களை பிரித்து பள்ளிக்குள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 9 லட்சம் பேர் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆவர்.
இந்த நடவடிக்கைகள், திபெத்திய மாணவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகவே பார்க்கப்படுகின்றன. திபெத்தின் 4,700 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கலாசாரத்தை அழிக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டமிட்டு செயல்படுகிறார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தங்கும் வகை பள்ளிகளில் கல்வி கொடுக்கும் முறை குழந்தைகள் மிகக் குறைந்த வயதிலிருந்தே தொடங்கப்படுகிறது. குழந்தைகள் தங்கள் தாய்மொழியான திபெத்திய மொழியில் பேசுவதை தவிர்த்து, மாறாக சீன மொழியில் பேசவும் கற்றுக்கொள்ளவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வகுப்புகள் அனைத்தும் சீன மொழியிலேயே நடைபெறுகின்றன.
மேலும், சீனாவின் பண்பாடு, வரலாறு போன்றவையே பிரதானமாக கற்பிக்கப்படுகின்றன. அதோடு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவத்தை பற்றியும் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.