ரயில் விபத்துகள் நேரும் சமயங்களில் சேலம் – அரக்கோணம் – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பல ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதால், அந்த பாதையில் பயணிக்கக்கூடிய பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்த நிலைமைக்கு மாற்றாக, சேலம் – விருத்தாசலம் வழியாக செல்லும் இரண்டாவது ரயில் பாதையை முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டங்களை தெற்கு ரயில்வே உருவாக்க வேண்டும் என, ரயில்வே பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயின் முக்கியமான வழித்தடங்களில் சென்னை – அரக்கோணம் – சேலம் மற்றும் சென்னை – விருத்தாசலம் பாதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதில், சென்னை – அரக்கோணம் – சேலம் பாதை கேரள மாநிலத்தின் பல நகரங்களை சென்னையுடன் இணைக்கிறது. அதேபோல், சென்னை – விருத்தாசலம் பாதை தென் மாவட்டங்களை தலைநகருடன் தொடர்புபடுத்துகிறது.
இந்த நிலையில், சேலத்தையும் விருத்தாசலத்தையும் இணைக்கும் பாதையான சேலம் – விருத்தாசலம் ரயில் வழித்தடம், சரியாகப் பயன்படுத்தப்படாமல், சில பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மட்டுமே இயங்கும் பாதையாக இருக்கிறது. இதனால், சேலம் – அரக்கோணம் – சென்னை பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே ஆர்வலர்களும் பயணிகளும் மேலும் கூறியதாவது: இந்த வழித்தடத்தில் இன்டர் சிட்டி, வந்தே பாரத், சதாப்தி போன்ற பல விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் இதனூடாக பல ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். ஆனால், பராமரிப்பு பணிகள் அல்லது விபத்துகள் ஏற்படும் போதும், எச்சரிக்கையின்றி பல ரயில்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால், பயணிகள் சிக்கலில் சிக்குகிறார்கள். குறிப்பாக மருத்துவம், நீதித்துறை, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக திட்டமிட்டு பயணிக்கும் நபர்களுக்கு இது பெரும் தடை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர மாற்றுக்கட்டமைப்பாக, சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் புதிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கனவே சென்னை – விருத்தாசலம் பாதையில் இரட்டை வழித்தடம் உள்ளது. விருத்தாசலம் – சேலம் இடையே ஒரே பாதை இருந்தாலும், குறைந்த ரயில்கள் மட்டுமே இயங்குவதால், அதிக நெரிசல் இல்லாமல் வசதியாக இயக்க முடிகிறது.
மேலும், இந்த பாதை முழுவதுமாக மின்சாரமயமாக்கப்பட்டிருப்பதால், மின்சார இன்ஜின்கள் இயக்கத்திற்கு வசதியாக உள்ளது. இதற்குறிய கிராசிங் நிலையங்கள் இடையே அமைந்திருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் பயணம் செய்யக்கூடிய வகையில், பாதுகாப்பாக இயங்கும் வசதி உள்ளது.
இந்த அளவுக்குப் போதிய வசதிகள் இருந்தும், இந்த வழித்தடத்தில் சென்னை – சேலம் இடையே கூடுதலாகவும், சிறப்பு காலங்களிலும் ரயில்கள் இயக்கப்படவில்லை. ரயில் சேவையில் இடையூறு ஏற்படும் நேரங்களில் கூட, தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த மாற்று வழியை பயன்படுத்த முன்வராதது, பயணிகள் வருத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.
எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம், சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் புதிய வழக்கமான மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இந்த தேவையை முன்னிட்டு, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் பகுதிகளின் மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முறையான அரசியல் மற்றும் நிர்வாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.