சிவராஜ்குமார் புற்றுநோயில் இருந்து மீண்ட அனுபவம் ஆவணப்படமாக உருவாகிறது
கன்னட திரைப்படங்களின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், ஜூலை 12ஆம் தேதி தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரது நடிப்பு பயணத்தில் உள்ள படங்களுக்கும், விரைவில் ஆரம்பிக்கவுள்ள புதிய திரைப்படங்களுக்கும் தொடர்புடைய போஸ்டர்கள் வெளியாகின. அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை குவித்தனர்.
இந்த விழாவின் முக்கியமான உரையாடலாக மாறியது ‘சர்வைவர்’ என்ற தலைப்பில் உருவாக உள்ள ஆவணப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பே ஆகும். சில காலத்திற்கு முன்பு, சிவராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தி அனைவரையும் கவலையடையச் செய்தது. அவரின் ஆரோக்கியத்திற்காக ரசிகர்கள், சக நட்சத்திரங்கள், உறவினர்கள் என பலரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
பின்னர், மருத்துவ சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு தேவையான அனைத்து மருத்துவ செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டு, பூரணமாக புற்றுநோயை வென்றவர் எனத் திரும்பி வந்தார். பின்னர் அளித்த பல பேட்டிகளில், இந்த சிக்கலான தருணத்தில் தன்னுடன் இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரது இந்த போராட்டத்தை பதிவு செய்யும் வகையில், ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட உள்ளது. சர்வைவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை, சிவராஜ்குமாரின் வாழ்க்கைத்துணையும், நடிகை, தயாரிப்பாளருமான கீதா சிவராஜ்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில், அவருக்குத் திடீரென புற்றுநோய் கண்டறியப்பட்ட தருணம், அதன் பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகள், மருத்துவப் பயணம், அமெரிக்காவில் அவர் எதிர்கொண்ட அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு உண்மையான நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.
இந்த உணர்வுபூர்வமான ஆவணப் படத்தை பிரதீப் சாஸ்திரி இயக்க உள்ளார். ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த ஆவணப்படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர்.