திருமலையில் ஆலோசனை கூட்டம்: வேதபண்டிதர்களுக்கு ஊக்கத்தொகை – வேற்று மத ஊழியர்களுக்கு நடவடிக்கை
திருமலையில் அமைந்துள்ள அன்னமையா பவனில் நேற்று, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டியும், தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடுவும் தலைமையேற்று கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி கூறியதாவது:
முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வேதம் பயின்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் திக்கற்றிருக்கும் 590 இளம் வேதபண்டிதர்களுக்குத் தெளிவான உதவியாக, மாதந்தோறும் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதி ஸ்ரீவாணி அறக்கட்டளையிலிருந்து பெறப்படும் நிதியின் வாயிலாக, விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்லக்கூடிய மேலும் இரண்டு சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கும்படியாக திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னும் சிலர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது குறித்து வரும் புகார்கள் உண்மைதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள 192 பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே விரைவில் நியமனங்கள் நடைபெறும் என்றார் அமைச்சர்.
வேற்று மத ஊழியர்களுக்கு விசாரணை, வீட்டு சோதனையும் – பானுபிரகாஷ் ரெட்டி தகவல்
இதே சந்தர்ப்பத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி கூறியதாவது:
சமீபகாலமாக, திருப்பதி தேவஸ்தானத்தில் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து, வேலை பார்த்து வந்த 22 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த வாரம் புத்தூரில் உள்ள ஒரு தேவாலயத்தில் வாரம் தோறும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த, தேவஸ்தானத்தின் ஒரு உயர் அதிகாரியையும் பணி நீக்கம் செய்துள்ளோம்.
இதைப் போலவே, இந்து பெயர்களை பயன்படுத்தி, வெளியில் இந்துவாக நடித்து, வீட்டுக்குள் வேறு மதத்தின் நடைமுறைகளைப் பின்பற்றும் பலர் இருக்கிறார்கள். ஏழுமலையான் மீது உண்மையான பக்தி இல்லாதவர்களும், இரட்டை வாழ்க்கை நடத்தும் ஊழியர்களும் இருப்பது நமக்குத் தெரிந்த விடயமே.
இதுதொடர்பாக பல புகார்கள் கிடைத்துள்ளன. எனவே, யாரேனும் இந்தப் பின்னணியைக் கொண்டவர்களைப்பற்றி தகவல் வழங்கினால், அவர்கள் வீட்டில் நேரடியாக சோதனை நடத்தப்படும்.
அச்சோதனையில் வேறு மதத்துடன் தொடர்புடைய புத்தகங்கள், அடையாளங்கள் அல்லது அண்டை வீட்டாரின் உறுதிப்படுத்தும் தகவல்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கூறினார் பானுபிரகாஷ் ரெட்டி.