மாநிலங்களவைக்கு நான்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மாநிலங்களவையின் உறுப்பினர்களாக நான்கு புதிய நபர்களை நியமிக்கும் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
மாநிலங்களவையில் மொத்தமாக 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 233 பேர் நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 12 உறுப்பினர்கள் மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். இந்த நியமனங்கள் இலக்கியம், அறிவியல், சமூக சேவை, மற்றும் பொது வாழ்க்கை போன்ற முக்கிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நபர்களுக்காக ஒதுக்கப்பட்டவை.
இந்த நேரடி நியமனங்களில் முதல்கட்டமாக, முக்கிய அரசு வழக்கறிஞராக செயல்பட்ட உஜ்வல் நிகம், முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, சமூக சேவையில் ஈடுபட்டுள்ள சி. சதானந்தன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் மீனாட்சி ஜெயின் ஆகிய நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு
இந்த நியமனங்களுக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
வழக்கறிஞர் உஜ்வல் நிகம், தீவிரவாதம் மற்றும் குற்றவியல் தொடர்பான பல முக்கிய வழக்குகளை மிக திறமையுடன் கையாள்தவர். நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளில் வெற்றி பெற அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, ஒரு திறமையான வெளியுறவுத் துறை செயலராகவும், அமெரிக்கா மற்றும் வங்கதேசத்தில் இந்திய தூதராகவும் பணியாற்றியவர். 2023ஆம் ஆண்டு இந்தியா ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்றபோது முக்கிய பொறுப்புகளைப் வகித்தவர்.
வரலாற்று ஆய்வாளர் டாக்டர் மீனாட்சி ஜெயின், பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் கல்வித் துறைகள் தொடர்பாக அவரது ஆழ்ந்த அறிவும், அவர் எழுதிய நூல்கள், ஆய்வுகளும் கல்வித்துறையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கேரளத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சி. சதானந்த மாஸ்டர், 1994ஆம் ஆண்டு அரசியல் தாக்குதலுக்குள்ளாகி, தன் இரண்டு கால்களையும் இழந்தாலும், அச்சம் இன்றிச் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது தன்னலமற்ற சேவை மிகவும் பாராட்டத்தக்கது எனவும், சமூகத்தின் முன் அவர் ஒரு முன்னுதாரணமாக உள்ளார் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.