முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில், பெருநகரச் சென்னையில் நடைமுறைக்கு வர உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்துத் துறையில் மேம்பாடு ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 2006ஆம் ஆண்டு “தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கை”யை வெளியிட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து ஆணையம் (UMTA) அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு “சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து ஆணையம்” (CUMTA) உருவாக்கப்பட்டது. ஆனால், 2021ஆம் ஆண்டில் தான் இந்த அமைப்பு தனித்துவமான நிர்வாக அமைப்புடன் செயல்படத் தொடங்கியது.
இந்த ஆணையம், தற்போதைய சென்னை மாநகர எல்லையை மட்டுமல்லாது, விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்களை தயாரித்துள்ளது. இதில், முக்கியமாக இணைப்புச் சாலைகள் அமைப்பது, இரட்டைக் கட்டுப்படி (டபுள் டெக்கர்) பேருந்துகளை இயக்குவது, வாகனங்கள் நிறுத்தும் இடங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்துள்ளது.
இந்த மாபெரும் திட்டங்களைத் தொடர்ச்சியாக செயல்படுத்தும் நோக்கில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தீர்வுகளை வடிவமைத்துள்ளது. இத்திட்டங்களுக்கு முதல்வரின் அனுமதி பெறும் வகையில், ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முக்கியமான முடிவுகளை எடுக்கும் கூட்டம் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் நடைபெற இருக்கிறது.
இதைப் பற்றித் தெரிவித்த கும்டா சிறப்பு அதிகாரி திரு. ஜெயக்குமார் கூறியதாவது:
“நாம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் தற்போது தீவிர வேகத்தில் உள்ளன. அண்மையில், தமிழ்நாடு தலைமைச் செயலர் தலைமையில் இரு முறை செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒரே பயணச்சீட்டை கொண்டு பல்வேறு வகையான பொதுப் போக்குவரத்தில் மக்கள் பயணிக்க முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், சென்னை நகரத்தின் போக்குவரத்து தேவைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை நெறிப்படுத்தி, படிப்படியாக முன்னேற்றம் காண வைத்துள்ளோம். இந்த காலத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு செயற்குழு கூட்டம், 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆணையக் கூட்டம் நடைபெறும்படி திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம், திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என அவர் கூறினார்.