2023-24ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மக்களவையில் மதியம் 1 மணிக்கும், மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கும் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை தொடர் நடக்கிறது.இதில், நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பாஜக 3வது ஆட்சிக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து, அது குறித்த விவாதம் நடைபெறும். ஆனால், இந்தக் கூட்டத் தொடரில் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், மணிப்பூரில் வன்முறை, ரயில் விபத்து, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், 2023-24ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார மதிப்பாய்வு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளார்.
இதன்படி, 2023-24ம் நிதியாண்டுக்கான பொருளாதார மதிப்பாய்வு இன்று மதியம் 1 மணிக்கு மக்களவையிலும், 2 மணிக்கு ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர் சந்திப்பு நடத்தவுள்ளார்.
நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தக் கட்டுரை, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டது.
2023-24 நிதியாண்டின் (ஏப்ரல்-மார்ச்) பொருளாதார நிலை மற்றும் பல்வேறு காரணிகள் மற்றும் நடப்பு ஆண்டிற்கான சில முன்னோக்கு எதிர்பார்ப்புகள் பற்றிய ஆழமான நுண்ணறிவு அறிக்கை கொண்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் சில அம்சங்கள் மற்றும் வடிவங்களை உள்ளடக்கும்.