85 ஆண்டுகளுக்கு பிறகு அரிச்சந்திரர் கோயிலில் கோலாகலத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள சுடுகாட்டை ஒட்டிய பகுதியில் அரிச்சந்திரர் மகாராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் முதன்முதலில் கும்பாபிஷேகம் 1800ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பின்னர், 1940ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால் அதனையடுத்து பல்லாண்டுகளாக எந்தவிதமான கும்பாபிஷேக நிகழ்வும் நடைபெறவில்லை.
இந்நிலையில், புனித திருப்பணிகள் நடைபெற்று, 85 ஆண்டுகளுக்குப் பிறகு திரு அரிச்சந்திரர் கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை, வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி, மகாகால ருத்ர பைரவர் மற்றும் சந்திரமதி உடன் அரிச்சந்திர சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆன்மிக நிகழ்வில், புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார் திருக்கூட்ட அமைப்பினர் மற்றும் பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி முழுவதும் தமிழ் மொழியில் நடைபெற்றது. கைலாய இசைக்குழுவின் நாதஸ்வர இசை நிகழ்வுகள், பக்தர்களை ஆனந்தத்தில் மும்முரமாக ஈடுபடுத்தின.
இக்கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஒம் நந்தீஸ்வர அன்னதான அறக்கட்டளை தலைவரும், கோயில் பராமரிப்பாளருமான திரு. ரவி மேற்கொண்டிருந்தார். அவர் தெரிவித்ததாவது:
“2021ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கடுமையாக முயன்று இறைவனின் அருளால் இக்கும்பாபிஷேகத்தை நடத்த முடிந்தது” என உணர்வுப்பூர்வமாக பகிர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் கூறியதாவது:
“கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயிலை ஒட்டிய இடுகாட்டு பகுதிக்குப் அருகே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் தங்கள் மனமார்ந்த வேண்டுதல்களை செலுத்தி, நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள். இங்கு வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதே அவர்களின் நம்பிக்கை” என்று தெரிவித்தனர்.