இங்கிலாந்து அணியை எதிர்த்து பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 336 ஓட்டங்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து அணி, இந்தியா நிர்ணயித்திருந்த 608 ரன்கள் இலக்கை அடைய இறுதி நாளில் பதிலடியாக களம் இறங்கியபோது, 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஆறு விக்கெட்கள் கைப்பற்றி, அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 269 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களையும் விளாசி, ஆட்ட நாயகனாக (மேன் ஆஃப் தி மேட்ச்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரின் நிலை 1-1 என சமமாகியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10-ம் தேதி, புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
பர்மிங்காம் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து, பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் ஷுப்மன் கில் பகிர்ந்த எண்ணங்கள் பின்வருமாறு:
“இந்த வெற்றி எனது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும். நான் ஓய்வு பெறும் காலத்திலும் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணமாக நினைவில் நிறைந்திருக்கும். இந்த ஆட்டத்தை முடித்த விதம் மிகுந்த திருப்தியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. தொடரில் இன்னும் மூன்று முக்கியமான போட்டிகள் உள்ளன, அடுத்ததது விரைவில் நடைபெற உள்ளது. இது நமக்குச் சாதகமானது, ஏனெனில் இப்போது நாங்கள் ஒரு நல்ல உற்சாக நிலைமையில் உள்ளோம்.”
அத்துடன், “பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பலர் ஒவ்வொரு தருணத்திலும் தங்கள் பங்களிப்பை அளித்த விதம் நம்மை உற்சாகப்படுத்தும் முக்கிய அம்சமாகும். வெவ்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு வீரர்கள் முன்னிறங்கி ஆட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். நாங்கள் எதிர்பார்ப்பது இப்படித்தான். இந்த ஒருமித்த அணிச்செயல் திறனே ஒரு சாம்பியன் அணியின் அடையாளமாகும். அந்த அளவுக்கு நமது வீரர்கள் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது” என்றும் அவர் கூறினார்.
மேலும், வீரர்கள் ஓய்வறையில் பேசும்போது ஷுப்மன் கில் கூறியதாவது:
“இந்த வெற்றியைப் பெற நாம் அனைவரும் மிகுந்த உழைப்புடன் செயல்பட்டோம். கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு இடையில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது எவ்வளவு சவாலானது என்பது எனக்கு நன்கு தெரியும், குறிப்பாக இதுவரை இந்தியா வெற்றி பெறாத மைதானத்தில் அதைச் சாதிப்பது மிகுந்த முயற்சியைத் தேவைப்படும்.
அணியில் உள்ள ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். முதல் நாளிலேயே நாங்கள் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று உறுதி கூறினோம். குறிப்பாக இந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலுடன் அனைவரும் ஒன்றிணைந்தோம். அந்த முயற்சி அனைவராலும் நன்கு நிறைவேற்றப்பட்டது” என அவர் தெரிவித்தார்.