அரசு பங்களாவை காலி செய்ய தாமதம் ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

0

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தற்போது வசித்து வரும், தலைமை நீதிபதிக்கான அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த பின்னணியில், அந்த பங்களாவை ஏன் இன்னும் காலி செய்யவில்லை என்பதற்கான விளக்கத்தை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ குடியிருப்பை, தற்போது வசித்து வரும் முன்னாள் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் காலி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திற்கு ஜூலை 1ஆம் தேதி ஒரு அதிகாரபூர்வ கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், தலைமை நீதிபதிக்கு உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டிருக்கும் அந்த பங்களாவை மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் வீட்டு வசதி குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த பங்களாவில் நீதிபதி சந்திரசூட் தங்குவதற்கான அனுமதி காலாவதியான பிறகும் தொடர்ந்து தங்கியுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும், “முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிடம் இருந்து கிருஷ்ண மேனன் மார்க் சாலையில் உள்ள பங்களா எண் 5ஐ உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், அவருக்கான அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசம் 2025 மே 10 அன்று முடிவடைந்தது. கூடுதலாக வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் மே 31, 2025 அன்று முடிந்துவிட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தன்னால் பங்களாவை ஏன் காலி செய்ய முடியவில்லை என்பதை விளக்கிய டி.ஒய். சந்திரசூட், “எனது இரு மகள்களும் நெமலின் மயோபதி எனும் ஒரு மரபணு தொடர்பான சிரமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் தொடர்ந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு ஏற்றவாறு சிறப்பான வசதிகள் கொண்ட வீடு எனக்கு அவசியமானதாக இருக்கிறது.

இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் பொருத்தமான வீடுகளைத் தேடி அலைந்தேன். பல சர்வீஸ் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஹோட்டல்கள் ஆகியவற்றையும் பரிசீலித்தேன். ஆனால் எந்த இடமும் என் குடும்ப தேவைகளுக்கு ஏற்றதாக அமைகவில்லை.

மத்திய அரசு எனக்கு தற்காலிகமாக ஒரு வீடுகொடுத்து வாடகைக்கு ஒதுக்கியிருந்தது. ஆனால், அந்த வீடு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலிருந்ததால், தற்போது அதில் பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன், நான் உடனடியாக அந்த வீடுக்கு இடம் பெயர்ந்து விடுவேன்” எனக் கூறியுள்ளார்.

Facebook Comments Box