திருவனந்தபுரத்தில் செயலிழந்து நின்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் எப்-35 வகை போர் விமானத்தை பழுது பார்க்கும் நோக்கில், அந்த நாட்டின் விமான பொறியாளர்கள் குழு திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளனர்.
பிரிட்டிஷ் கடற்படையின் “எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்” என்ற விமானத் தாங்கி போர் கப்பல், கடந்த மாதம் இந்தியக் கடற்படையுடன் இணைந்து நடத்திய கூட்டு பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்தது. அதன் இயக்கத்தில் பங்கேற்ற ஒரு எப்-35 போர் விமானம், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக கடந்த மாதம் 14ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
இந்தக் கோளாறை சரி செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலவிதமான தடைகளை எதிர்கொண்டன. மேலும், அந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து அதை ஜம்போ விமானத்தில் ஏற்றி அனுப்பும் முயற்சியும் பலனளிக்கவில்லை.
இதனையடுத்து, ராயல் விமானப்படையைச் சேர்ந்த விமான பொறியாளர்கள் குழு, ஏர்பஸ் வகை சரக்கு விமானம் மூலம் தேவையான உபகரணங்களுடன் நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். மதிப்பு ரூ.924 கோடியாக மதிக்கப்படும் இந்த விமானம், பழுதுபார்ப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முறைப்படி சரிசெய்யும் பணிகளில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இச்செயல்முறைக்கு தேவையான அனைத்துவிதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.