ரூபாய் நாணயங்களுக்கு பதிலாக, நாடெங்கிலும் பொதுமக்கள் தங்கள் அன்றாட செலவுகளில் ரூபாய் நோட்டுகளை அதிகமாக பயன்படுத்துவதால், 50 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை வெளியிடும் திட்டம் தற்போது இல்லை என மத்திய நிதி அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கான விளக்கத்தை நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள ஒரு பதிலில் கூறியுள்ளது. அதில், “இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வின்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை விட, மக்கள் ரூபாய் நோட்டுகளையே மேலானதாக கருதி விரும்பி பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக, 50 ரூபாய் நாணயத்தை உருவாக்குவது குறித்த யாதொரு யோசனையும் தற்போது துறையின் பரிசீலனையில் இல்லை. மேலும், நாணயங்களின் எடை மற்றும் பருமன் போன்ற அம்சங்கள் அவற்றை பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்துகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
பார்வை குறைபாடுடன் கூடிய நபர்களுக்காக 50 ரூபாய் நாணயங்களை வடிவமைத்து வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டுச், வழக்கறிஞர் ரோஹித் தண்ட்ரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவர், “தற்போதைய 50 ரூபாய் நோட்டுகளில் பார்வையற்ற நபர்கள் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய குறியீடுகள் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த மத்திய அரசின் பதிலளிக்கையில், “2016 ஆம் ஆண்டு அறிமுகமான புதிய மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளும், அதற்கு முந்தைய பதிப்புகளும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் துல்லியமாக மதிப்பை அறிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளன. இதைச் சரிசெய்யும் நோக்கில், பார்வை குறைபாடுள்ள நபர்கள் நோட்டுகளின் மதிப்பை அறிய வசதியாக, ‘MANI’ (Mobile Aided Note Identifier) என்ற மொபைல் செயலியை இந்திய ரிசர்வ் வங்கி 2020-ல் அறிமுகப்படுத்தியது” எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி. கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி அனீஷ் தயாள் ஆகியோர் கொண்ட அமர்வு பரிசீலித்து வருகிறது.