அந்தமான் அருகே கடலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைமையால், பாய்மரப் படகில் சிக்கித் தவித்த இரண்டு அமெரிக்கர்களை இந்திய கடலோர காவல்படை நேற்று காப்பாற்றியது.
‘சீ ஏஞ்சல்’ எனப்படும் ஒரு நவீன பாய்மரப் படகில் அமெரிக்காவைச் சேர்ந்த இருவரும், உலக நாடுகளில் சுற்றிப் பயணிக்கும் சாகச முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள கடல் பகுதி நேற்று கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
வீசிய வேகமான காற்றில், படகின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாய்கள் அழிந்து சிதறியதால், அவர்கள் பயணத்தை தொடர இயலாத நிலை உருவாயிற்று. இதனால் அவர்கள் நடுக்கடலில் தவித்து விட்டனர்.
இந்த விவரம் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திடம் கொண்டு செல்லப்பட்டது. தூதரக அதிகாரிகள் உடனே இந்திய கடலோர காவல்படையை அணுகினர்.
அதன்படி, இந்திய கடலோர காவல்படையின் ‘ராஜ்வீர்’ என்ற கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டது. தீவுகளுக்கு தெற்கே 53 மைல் தொலைவில் தத்தளித்து கொண்டிருந்த அமெரிக்கர்களை அந்தக் கப்பல் அணுகி, இருவரையும் பாதுகாப்பாக மீட்டது.