உலக அளவில் முன்னணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமானது மைக்ரோசாப்ட். அந்த நிறுவனம் அண்மையில் சுமார் 9,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவைத் தங்களுடைய ஊழியர்களிடம் அறிவிக்க தொடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாப்ட்வேர் அபிவிருத்தி, கணினி உதிரி பாகங்கள், உபயோக பொருட்கள் சார்ந்த மின்னணு சாதனங்கள், சமூக ஊடக சேவைகள், கிளவுட் தொழில்நுட்பம், இணையம் மற்றும் வீடியோ கேமிங் போன்ற பல துறைகளில் உலகளாவிய அளவில் முக்கிய சேவைகளை வழங்கி வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். உலக அளவில் பெரும் மக்களால் பயன்படுத்தப்படும் “விண்டோஸ்” இயங்குதளம் மற்றும் “மைக்ரோசாப்ட் 365” சேவைகள் அந்த நிறுவனத்தின் தலைசிறந்த தயாரிப்புகளாகும்.
இந்த நிலையில், நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை தற்போது செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. மைக்ரோசாப்டின் மொத்த ஊழியர் எண்ணிக்கையின் சுமார் 4 சதவீதம் பேர் இந்த ஊழியர் கழிப்பின் பாதிப்புக்கு உள்ளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தகவல்களின் படி, மைக்ரோசாப்டில் முழுநேர ஊழியர்களாக 2.20 லட்சம் பேருக்கும் மேல் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 சதவீதம் என்பது சுமார் 9,000 பேர் என்பதை குறிக்கிறது. இதற்கு முன் கடந்த மே மாதத்திலும் சுமார் 6,000 ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
சந்தையின் நிலைமை மாற்றம் மற்றும் அதற்கேற்ப நிறுவனம் தங்களை மறுவமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான செலவுகளும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.