புதிய வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஆரம்ப சம்பளம் வழங்கும் நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச வேலைவாய்ப்பு தளமான இன்டீட், ‘இன்னாகுரல் பேமேப் சர்வே’ என்ற பெயரில் ஒரு ஆய்வை நடத்தியது. இது கொரோனா காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களை, வேலைவாய்ப்பு துறைகளின் வளர்ச்சியையும், தொழிலாளர்களின் மனநிலையையும் மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், பல துறைகளை சேர்ந்த 1,311 நிறுவன மேலாளர்கள் மற்றும் 2,531 ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில், இந்தியாவின் சம்பள அமைப்பில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளது. குறிப்பாக, அனுபவமில்லாத அல்லது குறைந்த அனுபவமுள்ளவர்கள் (0 முதல் 2 ஆண்டுகள் வரை) பெறும் ஆரம்ப சம்பளத்தில் சென்னை உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு புதிய ஊழியர்கள் மாதத்திற்கு சுமார் ரூ.30,100 வரை சம்பளம் பெறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, மும்பையில் ரூ.28,500, ஹைதராபாத்தில் ரூ.28,500 மற்றும் பெங்களூருவில் ரூ.28,400 என காணப்படுகிறது.
மென்பொருள் மேம்பாட்டாளர்கள் முதல் பொறியியல் துறையில் நுழையும் புதியவர்களுக்கு சுமார் ரூ.25,000 முதல் ரூ.30,500 வரை சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை துறைகளில் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. 5 முதல் 8 ஆண்டுகள் அனுபவமுள்ள நடுத்தர மற்றும் மூத்த ஊழியர்கள் மாதம் ரூ.85,500 வரை சம்பாதிக்கிறார்கள். யுஐ/யுஎக்ஸ் வடிவமைப்பாளர்கள் தற்போது மென்பொருள் உருவாக்குநர்களுக்கு சமமாகக் கருதப்படுகிறார்கள்; இவர்களில் மூத்த ஊழியர்கள் மாதம் ரூ.65,000 வரையில் சம்பளம் பெறுகின்றனர். ஹைதராபாத் நகரம் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரமாக உள்ளது. இங்கு 5–8 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் மாதத்திற்கு ரூ.69,700 வரை சம்பாதிக்கிறார்கள்.
வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊழியர்களின் விருப்பம்
இண்டீட் இந்தியாவின் விற்பனைத் தலைவரான சசி குமார் கூறுகையில், “இந்தியாவின் சம்பள அமைப்புகள் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளன. ஊழியர்கள் தங்கள் தொழில் திறன் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் இழப்பீடு வழங்கும் நகரங்களைத் தேர்வுசெய்கிறார்கள்” என்றார்.
ஆய்வில் பங்கேற்ற ஊழியர்களில் 69 சதவீதம் பேர், தங்கள் சம்பளம் தாங்கள் வசிக்கும் நகரத்தில் உள்ள வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டால் குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வேறுபாடு டெல்லி (96%), மும்பை (95%), புனே (94%) மற்றும் பெங்களூரு (93%) போன்ற பெருநகரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் சம்பளமும் வாழ்க்கைச் செலவும் சமநிலையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகமாக இருந்தாலும், உணர்ச்சி சார்ந்த காரணங்களால் வேறு நகரங்களுக்கு மாற்றம் செய்ய 69 சதவீத ஊழியர்கள் தயக்கம் காட்டுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் செல்வாக்கு
டிஜிட்டல் மற்றும் ஏஐ (AI) சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய சேவைத் துறைகள் இன்னும் மேலோங்கிய நிலையைப் பெற்றுள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் புதிதாக நுழையும் ஊழியர்கள் மாதம் ரூ.28,100 முதல் ரூ.28,300 வரை சம்பளத்தை பெறுகிறார்கள். மேலும், இத்துறைகளில் 5 முதல் 8 ஆண்டு அனுபவமுள்ளவர்கள் ரூ.67,700 முதல் ரூ.68,200 வரையிலான சம்பளத்தை பெறுகிறார்கள் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.