போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுவிற்கு தீர்ப்பு நாளை (ஜூலை 8) வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் சட்டம் சார்ந்த வழக்கில், கடந்த மாதம் காவல்துறையால் கைது செய்யப்பட்ட திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி திரு நிர்மல்குமாரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது, ஸ்ரீகாந்த் சார்பாக முன்னிலையிலிருந்த மூத்த சட்டத்தரணி ஜான் சத்தியன், “ஸ்ரீகாந்த் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது, வழக்கில் முதலாவது குற்றவாளியான பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீகாந்திடம் இருந்து எந்தவொரு போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை” என வாதிட்டார்.
அதேபோல், நடிகர் கிருஷ்ணா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ் கூறியதாவது: “போலீஸாரால் அனுப்பப்பட்ட சம்மனுக்கு இணங்க அவர் விசாரணைக்கு ஆஜராகியபோது கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணங்களை போலீசார் தெளிவாக வெளியிடவில்லை. மேலும், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது நிரூபிக்கப்படவில்லை” என்றார்.
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், “கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, போதைப்பொருள் விற்பனை மற்றும் பரவல் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதன்மை குற்றவாளி பிரவீன் குமார் கைது செய்யப்பட்டார். பிரவீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்த் ஜூன் 23ம் தேதி மற்றும் கிருஷ்ணா ஜூன் 26ம் தேதி கைது செய்யப்பட்டனர்” என விளக்கினார்.
இதனையடுத்து, ஸ்ரீகாந்த் தரப்பில் உள்ள வழக்கறிஞர், “அவர் வீட்டில் தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்” என குறிப்பிட்டார்.
இவ்வாறு அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்ததை அடுத்து, இந்த ஜாமீன் மனுக்களில் உத்தரவு ஜூலை 8 ஆம் தேதி (நாளை) வழங்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவித்தார்.