‘தி பாரடைஸ்’ படத்தில் நானிக்கு எதிரணியாக ‘கில்’ பட புகழ் ராகவ் ஜூயல் நடிக்கிறார்
‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஓடேலா தற்போது இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இந்த படத்தில் நடிகர் நானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து நடிக்கின்ற மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை படக்குழு தற்போது வரை ரகசியமாக வைத்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘கில்’ படத்தில் வில்லனாக நடித்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ராகவ் ஜூயல், ‘தி பாரடைஸ்’ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கப் போவதாக உறுதியாகியுள்ளது.
ராகவ் ஜூயல், இந்தப் படம் மூலம் தென்னிந்திய திரைத்துறையில் தனது கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்பு இனிமேல் துவங்கவிருக்கிறது. இதற்கிடையில், நானி நடித்த காட்சிகள், தற்போது படக்குழுவால் சிறப்பாக அமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான செட்டில் இயக்கப்படுகின்றன.
இந்தப் படத்தை SLV Cinemas நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 2026-ம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.