மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களை எடுத்தது. அதற்குப் பதிலளித்த மேற்கிந்திய அணிக்கு 253 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, போட்டியின் நான்காம் நாளில் 71.3 ஓவர்கள் முடிவில் 243 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், கேமரூன் கிரீன் 52 ரன்களும் குவித்தனர்.
277 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி, 34.3 ஓவர்கள் வரை மட்டுமே நீடித்து, 143 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. அணி கேப்டன் ராஸ்டன் சேஸ் 34 ரன்களுடன் அதிகபட்சமாக பங்களித்தார். அவருடன் ஷமர் ஜோசப் 24, ஷாய் ஹோப் 17, பிரண்டன் கிங் 14 மற்றும் அல்சாரி ஜோசப் 13 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக அசத்தியதில், மிட்செல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்கூட்டியே கைப்பற்றியது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஜூலை 13ஆம் தேதி கிங்ஸ்டனில் பகல்-இரவு வடிவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.