2026 ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றது
அடுத்த வருடம் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ள T20 உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றுகளில், ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாலி அணி முதல் முறையாக அந்த இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆடவர் T20 உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய தகுதி சுற்றில் பங்கேற்ற இத்தாலி அணி, தனது சிறப்பான ஆட்டத்தால் ஸ்காட்லாந்து மற்றும் குயெர்ன்சி அணிகளை வெற்றி கொண்டு அனைவரையும் அசத்தியது. நெதர்லாந்து அணியுடன் நடந்த போட்டியில் இத்தாலி தோல்வியை சந்தித்தது. Jersey அணியுடன் திட்டமிடப்பட்டிருந்த ஆட்டம் வானிலை காரணமாக கைவிடப்பட்டது. இத்துடன் 2 வெற்றி, 1 தோல்வி மற்றும் 1 கைவிடப்பட்ட ஆட்டம் என மொத்தமாக 5 புள்ளிகள் பெற்று, ரன் ரேட்டின் அடிப்படையில் இத்தாலி அணி உலகக் கோப்பை அரங்கத்தில் நுழைய தகுதி பெற்றது.
இத்தாலி அணியின் தலைவராக, முன்பாக ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட ஜோ பர்ன்ஸ் செயல்படுகிறார். அவரது வழிநடத்தலால் இத்தாலி அணிக்கு இது வரலாற்றுப் புரட்சியாக அமைந்துள்ளது.
பொதுவாக இத்தாலி என்றால், உலக அளவில் அது ஒரு திறமையான கால்பந்து அணியாகவே அடையாளம் காணப்படுகிறது. உலகக் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளதுடன், இரண்டு முறை யூரோ சாம்பியன்ஷிப் பட்டமும், இரண்டு முறை நேஷன்ஸ் லீக் பட்டமும் வென்றுள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் பெற்றுள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கோப்பை தொடரில், தற்போதுவரை தகுதி பெற்ற அணிகளில் இந்தியா (நடப்பு சாம்பியன் என்ற மரியாதையுடன்), இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், கனடா, நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில், மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில், மீதமுள்ள ஐந்து இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் இன்னும் ஐந்து அணிகள் தகுதி பெறவேண்டும். அதில் இரண்டு அணிகள் ஆப்பிரிக்கா கண்டத்தினைச் சேர்ந்தவையாகவும், மூன்று அணிகள் ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவையாகவும் இருப்பார்கள்.