மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

0

மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மாங்காய் விவசாயத்தில் ஏற்பட்ட அதிக உற்பத்தி காரணமாகவும், சரியான விலை வழங்கப்படாததாலும் பெரிய அளவில் நஷ்டம் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டியது அவசியமாகும் என அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நெல், கரும்பு போன்ற முதன்மை பயிர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) திட்டத்தின் கீழ் மாம்பழங்களையும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“இந்த ஆண்டில் தமிழகத்தில் மாங்காய்களுக்கு சந்தையில் நியாயமான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் செயல்பட வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டுமே செய்து தனது கடமையை முடித்ததாக நினைத்து ஒதுங்கியிருக்கிறார். இதனால், விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மா விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வந்த சமயத்தில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணத்தில் சென்றிருந்தார். அவர் திரும்பிய பின்னரும் இந்த பிரச்சினைக்கான உரிய தீர்வு எடுக்கப்படாமற்போனது, விவசாயிகள் நலனில் திமுக அரசின் அக்கறை மிகம்குறைவாகவே உள்ளதை வெளிப்படுத்துகிறது.

கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள், மத்திய அரசுடன் இணைந்து அந்த மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நட்டஈடுகளும் ஊக்கத்தொகைகளும் அறிவித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் திமுக அரசு மற்றும் அதன் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவிதச் செயற்பாடும் இல்லாமல் மெளனமாக இருக்கின்றனர். இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள், மா உற்பத்தியில் இருந்து முற்றிலுமாக விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பருவநிலை மாற்றங்கள், பூச்சிக் கட்டுப்பாடு தவறுதல், பயிரின் நோய் தாக்கங்கள், தக்க விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் பல்வேறு சிக்கல்களை சந்தித்தும், விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களை எடுத்துக்காட்டாக கொண்டு, தமிழ்நாட்டிலும் மா விவசாயிகளுக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்துக்கான இழப்பீட்டை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதே நேரத்தில், நெல், கரும்பு போன்றவை போலவே மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box