லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 2-வது நிலை வீரராக விளையாடும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ், 5-வது நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொண்டார்.
இந்த மோதல் கடும் போட்டியாக இருந்தது. முதல் செட்டை 6-4 என அல்கராஸ் கைப்பற்றி முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டில் ஃபிரிட்ஸ் 5-7 என்ற கணக்கில் போராடி சமநிலை கொண்டு வந்தார். மூன்றாவது செட்டில் அல்கராஸ் மீண்டும் 6-3 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். நான்காவது செட் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் 7-6 (8-6) என வெற்றி பெற்ற அல்கராஸ், மொத்தமாக 3-1 செட்கள் என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
22 வயதுடைய அல்கராஸ், கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் விம்பிள்டனில் ஒற்றையர் பட்டத்தை வென்றவர். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பட்டம் வெல்லும் நோக்கத்துடன், தற்போதைய சாம்பியனாக இருக்கும் அவர், இந்த ஆண்டு மீண்டும் தலைமையேற்க தயாராகி உள்ளார்.
இதேவிளை, மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் உலக தர வரிசையில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் மோதினர். இந்த ஆட்டத்தில், சின்னர், தனது அபார ஆட்டத்தால் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மிகச்சுலபமாக ஜோகோவிசை தோற்கடித்தார்.
இதன் மூலம், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் அல்கராஸ் மற்றும் இத்தாலியின் சின்னர் ஆகியோர் மோத இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஒன்றுக்கொன்று எதிரியாக விளையாடியதையும் குறிப்பிடத்தக்கது.