பள்ளி நிலம் தொடர்பாக நிலவிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜர் – மன்னிப்பு கோரிய நிலையில் வழக்கு முடிவுக்கு வந்தது
கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் அமைந்துள்ள தேவநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் இயங்கிக் கொண்டிருந்த புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியை அகற்ற வேண்டும் என்று பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த கோரிக்கையைத் தாக்கல் செய்தவர் பாஜகவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளரான வினோத் ராகவேந்திரன் ஆவார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த பள்ளிக்கு மாற்று இடம் வழங்கி, கோயில் நிலத்திலிருந்து பள்ளியை அகற்ற வேண்டும் என்றும் அந்த நிலத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு 2024-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
ஆனால், அந்த நீதிமன்ற உத்தரவை அரசு கால தாமதமாக அமல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக வருவாய் துறை செயலர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி, அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில், மேற்படி ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், அவர்களது தவறுக்காக மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தனர்.
அதே சமயம், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகாவில் உள்ள பெரியபட்டு கிராமத்தில் 4.73 ஏக்கர் நிலம் அந்த பள்ளிக்கு மாற்றீடாக ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்கான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், பள்ளி நிர்வாகம் தரப்பில், “புதிய நிலம் கடலூர் நகரிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் உள்ளது; அந்த இடத்தில் குவாரிகள் செயல்படுகின்றன; போக்குவரத்து வசதியில்லை. எனவே, பள்ளிக்கு நகருக்கு அருகாமையில் – குறைந்தபட்சம் 5 கி.மீ. சுற்றளவில் – நிலம் வழங்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அரசு தரப்பு, “புதிய இடத்தில் சாலை வசதியை ஏற்படுத்தி தருகிறோம்” என்று உறுதியளித்தது. இதனையடுத்து, நீதிபதிகள், பள்ளி நிர்வாகம் மாற்று இடம் கோரி அரசு முறையில் மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தினர். அந்த மனுவை பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வருவாய் துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டதுடன், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.