உக்ரைனுக்கு பாதுகாப்பு காத்தலை முன்னிலைப்படுத்தி கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத அனுப்பலுக்குரிய நிலைமை குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, “உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் அனுப்பப்படுமா?” என்று எழுந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப்,
“நாம் அவர்களுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டிய கட்டாய நிலை உருவாகலாம். குறிப்பாக, தற்காப்புக்காக அவசியமான ஆயுதங்களை வழங்க நேரிடும். உக்ரைனியர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கைகள் எந்தவித சந்தோஷத்தையும் அளிக்கவில்லை,” என்று கூறினார்.
முந்தைய அதிபராக இருந்த ஜோ பிடன், உக்ரைனுக்குத் தொடர்ச்சியாக ராணுவ ஆதரவு அளித்து வந்தார். குறிப்பாக, 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதத்தில் மீண்டும் அதிபராக பதவியேற்ற பிறகு, உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் குறித்த எந்தவொரு புதிய அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
மேலும், கடந்த வாரம் வெளியான வெள்ளை மாளிகையின் அறிக்கையில், அமெரிக்கா வழங்கி வந்த ராணுவ ஆதரவை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இத்தனைக்கும் பிறகு, தற்போதைய சூழ்நிலைகளை எடுத்துரைத்து, உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவிகளை வழங்கும் நிலைக்கு ட்ரம்ப் முன்வந்துள்ளார்.