அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய வரி நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு: பிரேசிலுக்கு 50% வரி, ஏனைய நாடுகளுக்கு சதவீத கட்டணங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் பேரில், பிரேசில் உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது புதிய வரி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அடங்கிய ஏனைய சில நாடுகளுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சம்பந்தப்பட்ட 8 நாடுகளின் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார். இந்த வரி விதிப்பு திட்டங்கள் 2025 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவரமாகப் பார்க்கும்போது:
- பிரேசிலுக்கு 50% வரி
- அல்ஜீரியா, ஈராக், லிபியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு 30% வரி
- புருனே, மால்டோவா ஆகியவற்றிற்கு 25% வரி
- பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 20% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தும் “நியாயமற்ற வர்த்தக உடன்பாடுகள் மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்ட இடர்பாடுகளை சீர்செய்யும் நோக்கத்தில்” மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாக அமையும் என அவர் விளக்கினார்.
பிரேசில் மீதான விசேட நடவடிக்கை:
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது, கடந்த தேர்தலின் போது மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் அமெரிக்க ஆதரவாளராக இருந்தார். தற்போது பிரேசில் அதிபராக இருப்பவர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா, போல்சனாரோவுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்ய துவக்கியுள்ளார். இந்த விசாரணையை நிறுத்தும்படி ட்ரம்ப், லூலாவுக்கு தனிப்பட்ட கடிதம் எழுதியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப், பிரேசில் மீது 50% வரியை அறிவித்ததாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூலாவின் பதில்:
ட்ரம்ப் அறிவித்த 50% வரி நடவடிக்கைக்கு பதிலளிக்கையிலேயே, பிரேசில் அதிபர் லூலா டி சில்வா தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பதிவிட்டுள்ளார்:
“பிரேசில் என்பது முழுமையான சுயாதீனத்தை கொண்ட இறையாண்மை நாடு. வெளிநாட்டிலிருந்து வரும் எவ்வகை அச்சுறுத்தலையும் நாங்கள் ஏற்க இயலாது. ஆட்சியை பறிக்க முயற்சி செய்தவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், பிரேசிலின் நீதித்துறையின் தளத்திற்குள் நடைபெறுகின்றன. இந்த அமைப்புகள் வெளி தாக்குதலால் பாதிக்கப்பட முடியாது.
மேலும், அமெரிக்கா – பிரேசில் இடையேயான வர்த்தக ஒப்பந்தங்களில் சீர்கேடு உள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. கடந்த 15 ஆண்டுகளில், இரு நாடுகளும் 410 பில்லியன் அமெரிக்க டாலர்களை வியாபாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக அதற்கான புள்ளிவிவரங்கள் தெளிவாக கூறுகின்றன.
எனவே, அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளைச் சுமத்தியால், அதற்கு பதிலடியாக பிரேசில் பொருளாதார சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.”