ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ரோமன் ஸ்டாரோவோயிட் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் – பதவியிலிருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே சம்பவம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவரை பதவியிலிருந்து விலக்கி வைத்த சில மணி நேரங்களுக்குள், ரோமன் ஸ்டாரோவோயிட் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோ நகரின் புறநகர பகுதியில் அவர் காரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோமன் ஸ்டாரோவோயிட், உக்ரைனுடன் இணைந்த எல்லைப் பகுதியான குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆளுநராக ஐந்தாண்டுகளாக பணியாற்றியவர். 2023 மே மாதத்தில், அதிபர் புதின் அவரை ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமித்திருந்தார்.
அந்த அமைப்பில் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்வுகள் அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், உக்ரைன் ட்ரோன்களின் தாக்குதலால் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக ரஷ்யாவின் விமான நிலையங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் அத்தியாவசியமற்ற முறையில் தரையிறக்கப்பட்டன. அதனுடன், உஸ்ட்-லுகா துறைமுகத்தில் டேங்கர் கப்பல் வெடித்து சிதறியதில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்நிகழ்வுகள் போக்குவரத்துத் துறை அமைச்சின் செயல்பாடுகளுக்குச் சவால் ஏற்படுத்தியதால், ரோமன் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமாக அவரது நீக்கத்திற்கான காரணங்களை ரஷ்ய அரசு எதுவும் வெளியிடவில்லை.
மேலும், ரோமனின் குர்ஸ்க் ஆளுநர் பதவிக்காலத்தில் ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதனால், அவரின் அமைச்சுப் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வளைகளில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவின் நோவ்கோரோட் பிராந்திய ஆளுநராக பணியாற்றி வந்த ஆண்ட்ரே நிகிடின், புதிய போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தொழில்முறை பின்புலம் மற்றும் அனுபவம், ரஷ்யாவின் போக்குவரத்து துறைக்கு பலம் சேர்க்கும் என்று அதிபர் புதின் நம்புவதாக, ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.