இந்தியாவுடன் ஏற்பட்ட சமீபத்திய மோதலின் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தும் எந்த திட்டமும் பாகிஸ்தானுக்கு இல்லை என அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தானில் இயங்கிய தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் பக்கம் இருந்து இந்திய எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. ஆனால் அந்த நடவடிக்கைகள் இந்திய இராணுவத்தால் முற்றாக தடுக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிரொலி அளித்தது.
இந்த சூழ்நிலையில், இஸ்லாமாபாத்தில் மாணவர்களுடன் சனிக்கிழமை சந்தித்தபோது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த சம்பவங்களைப் பற்றி பேசினார். அப்போது, இந்தியாவுடன் நடந்த நான்கு நாட்கள் நீடித்த மோதலை அவர் மீண்டும் நினைவுகூர்ந்தார்.
“எமது அணுசக்தி திட்டம் முழுமையாக நாட்டின் பாதுகாப்பைக் கருதி உருவாக்கப்பட்டது. அது யுத்தம் செய்யும் நோக்கத்தில் அல்ல, மாறாக, அமைதியை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் உள்ளது. சமீபத்திய மோதலில் 55 பேர் உயிரிழந்தனர். இந்தியா மேற்கொண்ட தாக்குதலுக்கு நாங்களும் பதிலளித்தோம்” என்று அவர் கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணுசக்தி உடைய நாடுகள் என்பதால், இவர்களுக்கிடையிலான மோதல் உலக நாடுகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலைக்கு முடிவுகொடுக்க இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தன. இச்சமரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது, இது குறிப்பிடத்தக்க விடயமாகும்.