உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். இப்போது, அவர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறும் வழியில் முக்கிய பங்கு வகித்தவர் எலான் மஸ்க். இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ட்ரம்ப் தலைமையிலான அரசில் அவர் அரசு செயல்திறன் மேம்பாட்டு துறையின் (DOJE) தலைவராக நியமிக்கபட்டார்.
ஆனால், நாட்டின் உள்நாட்டு செலவுகளை குறைக்கும் முயற்சியாகவும், வரிகளை குறைக்கும் நோக்கத்துடன் ட்ரம்ப் கொண்டு வந்த மசோதாவை எலான் மஸ்க் எதிர்த்ததன் காரணமாக, இருவருக்கும் கொள்கை அடிப்படையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
இந்த சூழலில், தாம் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்க வேண்டும் என எண்ணிய எலான் மஸ்க், பொதுமக்களிடம் கருத்து கேட்டு அவர்களின் ஆதரவை பெற்றார். பெரும்பாலான மக்களும் இதற்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து, “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில் புதிய கட்சியை கடந்த மாதம் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
“அமெரிக்காவை ஆளும் அதிகாரம் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்த நிலைமையை மாற்றவே நாம் இந்த புதிய கட்சியை உருவாக்குகிறோம்” என்று எலான் மஸ்க் வலியுறுத்தினார்.