இந்தியாவில் பல முக்கிய குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முக்கிய காலிஸ்தான் தொடர்புடையவரை உள்ளடக்கிய எட்டு தீவிரவாதிகளை அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ (FBI) கைது செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட பலர், குறிப்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் ரவுடிகள், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக புகுந்து தங்கியிருப்பது போல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அந்நாடுகளில் வசித்தபடியே துப்பாக்கிகள் காட்டி பயமுறுத்தல், ஆள்கடத்தல், சித்திரவதை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குழுவில் முக்கியமானவர் பவித்தர் சிங் பதாலா. இவர் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ‘பாபர் கல்சா இன்டர்நேஷனல்’ (BKI) என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினராகக் கருதப்படுகிறார். பல்வேறு தீவிரவாத வழக்குகளில் அவரது பெயர் தொடர்புடையதாக இருந்து வருவதால், தேசிய புலனாய்வுத் துறை (NIA) அவரை நீண்ட காலமாக தேடி வருகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, பவித்தர் சிங் பதாலா உள்ளிட்ட எட்டு பேரை அமெரிக்கா புலனாய்வுத் துறையினர் சான் ஜோகுவின் மாகாணத்தில் கைது செய்தனர். அந்த குழு அங்கு ஒரு ரவுடி கும்பலைப் போன்று செயல்பட்டு, ஆள்கடத்தல் மற்றும் சித்ரவதை போன்ற செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, எஃப்பிஐ அதிகாரிகளும், உள்ளூர் போலீசாரும் இணைந்து செயல்பட்டு, பல இடங்களில் சோதனைகள் நடத்தியதில் பவித்தர் சிங் பதாலா, தில்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், மன்ப்ரீத் ரந்தாவா, சரப்ஜித் சிங், குர்தஜ் சிங் மற்றும் விஷால் ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.